Wednesday, May 2, 2018

ஓர் கனவு



நெடுங்காலம் புகைந்துகொண்டிருப்பதைவிட
பற்றி எரிவது மேல்,
ஒருகணம் எனினும்




நீங்கள் கொண்டாடித்தீர்த்தவளை
யாரோ ஒருத்தி போல்
கடந்துசெல்ல நேர்ந்ததுண்டா? 
ஆயிரம் தற்கொலைக்கு சமம்!!


ஓர் கனவு
ஒரு பெருங்கனவு
கனவேதுமின்றி
வாழ வேண்டுமென்று!!

Thursday, January 19, 2017

சென்னைக்கென சில வரிகள், இந்தியாவின் பல முதன்மைகளில் முதல் எம் சென்னை

நவீன இந்தியாவின் இன்றைய பல நிறுவனங்களுக்கு முதல்தளம் அமைத்துக் கொடுத்தது பாரம்பரிய பக்க நம் சென்னை என்பது இன்று நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை. இன்றைய அழகிய சென்னையின் பேரழகான பாரம்பரியத்தைப் பற்றி சிறிய தொகுப்பு இது.
நாம் இன்று  அழகியலும், பாரம்பரியமும் ஒருங்கே நிறைந்த ஒரு மாநகரில் வாழ்கிறோம்.சென்னை,இந்தியாவின் மற்ற பெரு நகரங்களைப் போன்றே சென்னையும் வளர்ச்சி என்ற மாயையின் தாக்கம் மற்றும் சவால்களால் அதன் இக்கட்டான கால கட்டத்தில் நிலை கொண்டுள்ளது. ஒரு நகரின் சிக்கல் மற்றும் சவால்களை நாம் எதிர்கொள்ள அதன் பெருயையும் பாரம்பரியத்தையும் ச்சயம் அறிந்திருக்க வேண்டும். அதுவே நமக்கான முயற்சிகளின் உந்துதல். சென்னையின் அத்தகைய பெருமைகளுள் ஒன்று நவீன இந்தியாவிற்கான அதன் பங்களிப்பு. பாரம்பரியமும், அதை சென்னையின் குறிப்பிடத்தக்க வலிமை என்றே கூற வேண்டும்.            


புறந்தள்ளப்பட்ட ஆகஸ்ட்-22
==============================
         
ஆகஸ்டு 15, ஒவ்வொரு இந்தியனும் கொண்டாட காரணங்கள் பல நிறைந்த நாள். நம்மில் சிலருக்கு சுதந்திரத்திற்கு முந்தைய நாளின் நேருவின் உரை நிகழ்வு வரை நினைவுண்டு.          ஆனால் அதே ஆகஸ்டு மாதத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க நாளான ஆகஸ்ட்-22, நம்மில் பலரால் கண்டுகொள்ளப்படவில்லை. அது சென்னையின் வழக்கமான ஒரு நாளன்று, சென்னைக்கான ஒருநாள். ஆம் ஒட்டு மொத்த சென்னைக்கான ஒருநாள். "சென்னை தினம் " .இந்த நாளே சென்னை மக்களால் "மெட்ராஸ் டே" 1996 வரை என்று கொண்டாடப்பட்டு வந்தது. 1996ல் மெட்ராஸ்  சென்னை என்று அரசிதழில் பெயர் மாற்றப்பட்டது.

சென்னை தினம், இது சென்னையின் தொழில் முன்னோடிகளின் ஒருவரான திரு.எஸ்.முத்தையா அவர்களால் 2004 ம் ஆண்டு  முன்னெடுக்கப்பட்டது. ஒரு நாள் நிகழ்வாகத் தொடங்கிய சென்னை தினம்  இன்று ஒரு வாரம் முதல் ஒரு மாதம் முழுமைக்குமான கொண்டாட்டமாக மாறியுள்ளது. இருப்பினும் இன்றளவில் இது மிகச் சிறிய குழு அல்லது சிறு வட்டாரக் கொண்டாட்டமாகவே உள்ளது.    
                 
உண்மையில் சென்னை என்ற மாநகரம் கிழக்கிந்தியக் கம்பெனியால் 1599ல் நிறுவப்பட்டது. சூரத் நகரில் ஆங்கிலேயர்களின்  
வியாபாரம் ஸ்தாபித்த பொழுது சென்னை துறைமுகம் அவர்களுக்கு ஒரு வர்த்தக முகப்பாகத் தோன்றி, அதுவே சென்னை நகரம் உருவாக காரணமாயிற்று. வட சென்னையின் சில இடங்களில் தொடங்கிய அவர்களது வர்த்தக முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தரவில்லை.                      

அது நாயக்க மன்னர்களின்  காலம் , கடல் மற்றும் சுரங்க வர்த்தகத்தில் போர்ச்சுக்கிசியர்களை எதிர்ப்பதற்கு நாயக்க மன்னர்களுக்கு ஆங்கிலேயர்களின் உதவி தேவைப்பட்டது. நாயக்கர் மற்றும் ஆங்கிலேயர்களின் இந்தப் பொருந்தாக் கூட்டணியே பின்னாளில் சென்னை நகரம் தோன்ற காரணமாயிற்று. இன்றைய சட்டசபை இயங்கும் புனித ஜார்ஜ் கோட்டை 1969ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 22 ம் தேதி  நாயக்கர்களால் ஆங்கிலேயருக்குத் தாரை வார்க்கப்பட்டது.    

பல்துறை நிறுவன பரிமாணம்
=================================
                 
இந்தியாவின் இன்றைய பல முக்கிய நிறுவனங்களின் தொடக்கப் புள்ளியாக அமைந்த பெருமை சென்னையை சேரும். வர்த்தக நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி அரசியல் அதிகாரத்தில் கோலோச்சிய பொழுது அரசு மற்றும் அரசு நிர்வாகத்திற்கு எனவொரு அடிப்படைக் கட்டமைப்புத் தேவைப்பட்டது. ஆங்கிலேயர்களின் அத்தகைய தேவைக்கு அன்றைய சென்னை நகரமே வடிகாலாய் அமைந்தது.

இந்தியாவின் முதல் மாநகராட்சி,சென்னை
===============================================
ஆரம்பத்தில் ,சென்னை கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆசியப் பிராந்தியத்தின் ஜாவா மாகாணத்தின் ஒரு அங்கமாகவே இருந்தது. 1658 ம் ஆண்டில் கிழக்குக் கடற்கரை மற்றும் வங்கக்கரையோர நிறுவனங்கள் அனைத்திற்கும்  புனித ஜார்ஜ் கோட்டை தலைமையிடமாக்கப்பட்டது. இந்த நிர்வாக மாற்றம் 1698 ம் ஆண்டு வரை தொடர்ந்தது.                      
எளிஹீ யாழ் என்னும் சென்னை மாகாண தலைவர்களில் ஒருவரே சென்னை மாநகராட்சியின் கட்டடம் மற்றும் நிர்வாக அலுவலகங்கள் அமைய உறுதுணையாய் விளங்கியவர்.                
திரு.யாழ் அவர்கள் இந்த மாகாண வருவாயை அடிப்படையாகக் கொண்டே யாழ் பல்கலையை நிறுவியதாகவும் , அதில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டு பதவியை இழந்த தாகவும் செய்தியுண்டு. இன்றைய இந்தியாவின உள்ளாட்சி அரசாளுமை மற்றும் உள்துறை நிர்வாகத்தின் அடித்தளமாய் அமைந்ததே அம்முதல் சென்னை மாநகராட்சி தான்.  

நாதேனியல் ஹிங்கின்சன் , என்ற ஆங்கிலேயரே சென்னை மாநகரின் முதல் மேயராகப் பொறுப்பேற்றார்.சென்னை மாநகர எல்லை புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து பத்து மைல்களுக்கு விரிவு செய்யப்பட்டது. அதன் அதிகாரம் பள்ளிகள், டவுன் ஹால் மற்றும் சிறை ஆகியவற்றின் கட்டுமான பொறுப்பை ஏற்பதுடன், சிறு வழக்குகள் பதிவு செய்யும் அளவிற்கு பரவலாக்கப்பட்டது. இதற்கான அதிகாரப் பூர்வ பட்டயமும் 1688, செப்டம்பர் 29ல் வெளியானது.
                   
முதல் இந்திய ரயில்வே
=========================
இந்தியாவின் முதல் ரயில் பாய்ந்தது மும்பை - தானே என்பது நம்மில் பலர் அறிந்த ஒன்றே. ஆயினும் இதற்கான தொடக்கம் 1845 ல் சென்னையின் மெட்ராஸ் ரயில்வே கம்பெனியில் வித்திடப்பட்டது என்பது கூடுதல் செய்தி . மும்பைக்கு என்று பிரத்யேக இரயில் நிறுவனம் பின்னாட்களில் நிறுவப்பட்டது. சென்னை பிராந்தியத்திற்கான முதல் இரயில் 1856 ம் ஆண்டு சென்னை இராயப்புரத்திலிருந்து ஆம்பூர் வரை இயக்கப்பட்டது.  
                   
இந்தியாவின் முதல் ரயில் தடமான மும்பை - தானே வழித்தடம் தற்போது நடைமுறையில் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, இன்றளவும் இயங்கும் ரயில் வழித்தடங்களில் பழமையானதாக விளங்கும் ராயப்புரம் ரயில் நிலையத்தை இந்தியத் துணைக் கண்டத்தின் பழம்பெருமை வாய்ந்த ஒன்றாகவும், முதன்மையானதாகவும் கொள்ளலாம்.    

நீதி துறையிலும் பங்குண்டு
==============================              
1678 ல் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய வழக்குகளை விசாரிப்பதற்கான தனி உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது. இது 1684ல் இங்கிலாந்தின் நீதிபதி மற்றும் வழக்கறிஞர் கொண்ட வழக்காடு மன்றமாக மாற்றப்பட்டது . சிறு குற்றங்களை விசாரிக்கும் அதிகாரமும் மேயரின் வரம்பிலேயே வந்ததால் அதற்கான பிரத்யேக நீதிமன்றமும் 1797 ல் தொடங்கப்பட்டது. இதுவே ஆவண நீதிமன்றம் என்றும் அழைக்கப்பட்டது, நிகழ்வுகள் அனைத்தையும் ஆவணம் செய்வதற்கு சிறப்பதிகாரியின் தேவையிருந்ததால் இப்பெயரினைப் பெற்றது. 1801 ல் நிர்வாக வழக்கு மன்றமும் , ஆவணப்பதிவு நீதிமன்றமும் ஒருங்கிணைந்து உச்ச நீதிமன்றமாக மீண்டும் உருப்பெற்றது. இந்த உச்ச நீதிமன்றம் 1862ல் மற்றுமொரு கிழக்கிந்தியக் கம்பெனியின் நீதிமன்றத்தோடு இணைக்கப்பட்டு ஒரு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை தோற்றுவித்தது. அதுவே நம் இன்றைய சென்னை உயர் நீதிமன்றம் .      

இராணுவத்திலும் இடமுண்டு
================================            
ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயரிடம் பயிற்சி பெற்ற வீரர்களும், போர்க்கால ஆயுதங்களும் இருந்திருக்கவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்ட பிரெஞ்சுப் படை 1746 செப்டம்பரில் ஜார்ஜ் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது. 1749 வரை கோட்டை பிரெஞ்சு வசமே இருந்தது.                      

சென்னைக்கென்ற பிரத்யேக இராணுவம் மற்றும் பட்டாலியன்கள் உருவாக்கப்பட்டன. இப்பாட்டாலியன்களின் எண்ணிக்கை எட்டே ஆண்டுகளில் 19 ஆக உயர்ந்தது. கம்பெனியும் காலாட்படை மற்றும் குதிரைப் படை வீரர்களின் எண்ணிக்கையை உயர்த்துதல் மற்றும் போர் உபகரணங்களில் முதலீடு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது. 1895 ம் ஆண்டு சென்னை மற்றும் பிற மாகாண இராணுவங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்திய ராணுவம் உருவாகியது.
                       
சென்னையும் ,மக்கள் தொகை கணக்கெடுப்பும்
====================================================
ஏகாதிபத்திய இந்தியாவின் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1871ல் தொடங்கியது. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தக் கணக்கெடுப்பு தொடர்ந்தது. பிறப்பு, இறப்பினை பதிவு செய்யும் சட்டம் 1884 ல் நிறைவேறியது. ஆனால் இந்த நடைமுறை 1865ல் இருந்தே அமலில் இருந்தது. ஆயினும் 1901 ல் சென்னை மட்டுமே பிறப்பு இறப்பு பதிவுகளில் சிறப்பாக விளங்குவதாக பெயர் பெற்றது.      
               
நவீன இந்தியாவின் வடிவம் முழுப்பெற்றதில் சென்னைக்கென அளப்பரிய பங்குண்டு , அவற்றுள் ஒரு சிலவற்றைப் பற்றியே இங்கு குறிப்பிட்டுள்ளோம். கல்வி, வணிகம் மற்றும் சேவை என சென்னைக் கென்று சிறப்புமிக்க பல முகங்கள் உண்டு. துரதிர்ஷ்டவசமாக சென்னையை புகலிடமாகக் கொண்டுள்ள நம்மில் பலருக்கு அதன் பாரம்பரியமும், நவீன இந்தியாவிற்கான அதன் பங்களிப்பும் முழுமையாக அறிந்திருக்கவில்லை. தற்போதைய சென்னை நகரம் சமூகப் பொறுப்பும் வாய்மையும் நிறைந்த நம்  முன்னோர் பலரால் இன்றைய இளம் தலைமுறைக்காக அணு , அணுவாகக் கட்டமைக்கப்பட்டது. பேரன்பும், பெரும் சிறப்புமிக்க இந்நகரத்தை மேலும் சிறப்புடன் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கான உறுதி மொழியை பிரகடனம் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை.





Monday, December 28, 2015

என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்
*
“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி
வெட்டும் தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.
*
“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
பிராமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”
இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.
ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?
-வே. மதிமாறன்

இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது

எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது,
எப்படி முடியும் ?
யாருக்கும் தெரியாது.
இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்களை
அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.
நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.
ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,
நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,
அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.
ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை -
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத் தவறி
விடுகிறோம்.
கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத் தெரிவதில்லை.
சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக
மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !
பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !
இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது.கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !
நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.
வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.
நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.
தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.
மனிதர்களை மேலும் நல்லவர்களாக
உருவாக்க இது உதவும்

Sunday, December 29, 2013

கவிஞன்

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்போன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்
இவைசரி யென்றால் இயம்புதென் தொழில்
இவை தவ றாயின் எதிர்ப்பதென் வேலை
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தலை அறிக
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்
பாசம் மிகுத்தேன், பற்றுதல் மிகுத்தேன்
நானே தொடக்கம் நானே முடிவு
நானுரைப் பதுதான் நாட்டின் சாட்ட
                                                   - கவியரசு கண்ணதாசன்

Thursday, December 26, 2013

பெரியாரும் விவேகானந்தரும்!

கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்...

-விவேகானந்தர்

“சகோதரர்களே! நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்ராயங்கள்தாம் என்று சொல்வதோடு நான் ஒரு சாதரண மனிதன்தான். எவ்விதத் தன்மையும் பொருந்திய தீர்க்கதரிசியல்லன். ஆகையால் தனிமனிதன் என்கிற முறையில்தான் என்னுடைய அபிப்ராயங்களையும் – நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தாம் – எதிலும் எனக்குச் சரியென்று பட்டதைத்தான் உரைக்கிறேன். ‘ஒரு பெரியார் உரைத்துவிட்டார்’ என நீங்கள் கருதி அப்படியே கேட்டு நம்பிவிடுவீர்களானால் அப்போது நீங்கள் யாவரும் அடிமைகளே!… யார் உரைப்பதையும் நாம் கேட்டு ‘வேத வாக்கு’ என்று நம்பி நடப்பதால் தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கிறோம். ஆகவே நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு அவை உண்மையென்று தோன்றினால் அவைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள்”
- பெரியார்

Monday, December 23, 2013

அலுவலகத்தில் ஒரு நாள்!

இன்று அலுவலகத்தில் நடந்த ஒரு விரும்பத்தகாத ஒரு நிகழ்வு, எங்களில் சிலரை சில நிமிடங்களுக்கு திக்கு முக்காட வைத்தது.

நாங்கள் பயந்த அளவிற்கு பெரிதாக எதுவும் நடந்து விடவில்லை! பதினைந்து நிமிட கணத்தில் பட்ட வருத்தத்தின் தாக்கத்தைத் தூக்கி எறிந்து விட்டு மகிழ்ச்சியின் எல்லைக்கு இழுத்துச் சென்றது!


இது ஒரு புறம் இருக்கையில் இந்தச் சம்பவம் இரண்டு விடயங்களை முன்னே வைத்தது.

. பொறாமை கலந்த வாழ்த்துக்களையும், போலித்தனமான உதட்டுச் சிரிப்புகளையும் பரிமாறிக் கொள்ளும் அலுவலகச் சூழலில், உண்மையாகவே அடுத்தவரின் துன்பத்தை தன் துன்பமாகவும்,
 அடுத்தவரின் மகிழ்ச்சியைத் தங்களது மகிழ்ச்சியாகவும் எண்ணும் மனிதத்தை சில நிமிடங்கள் காண முடிந்த்தது.

. நகரத்தின் நுகர்வோர் கலாச்சாரத்தில் வாழ்ந்து பழகிவிட்டவர்களுக்கு அடுத்தவர்களின் கஷ்டங்கள் புரிவதில்லை என்றும், யாரும் யார்க்கும் நேரம் ஒதுக்க தயார் இல்லை என்றும்..... நகரங்களில் மனிதம்
 இறந்துவிட்டது என்றும் , வாதாடும் என் நண்பர்கள் சிலரிடத்தில் ”மனிதம் என்பது சூழலைப் பொறுத்து இல்லை, முழுவதுமாக சுயத்தைப் பொறுத்தது ”என்று நான் முன் வைக்கும்
 வாதத்தின் அடி நாதத்தை எடுத்துரைக்கும் வண்ணமாகவே அந்த நிகழ்வு அமைந்தது.

அன்பு, பாசம் , அக்கறை, பரிவு, இரக்கம் இவற்றை நாம் பிறரிடம் செல்த்துவதையும், மனிதத்தை வளர்ப்ப்பதிலும் சூழ் லைக்குச் சற்றே பங்கு இருந்த போதிலும் அது முற்றிலும் தனி மனிதனையும்,
அவனது மனத்தையும் சார்ந்தது.

இருக்கிறதோ, இல்லயோ என்று உறுதியாகச் சொல்ல இயலாத
யாரிடமும் நாம்  கேட்கவும் வேண்டாம், எதையும் தட்டவும் வேண்டாம்!
கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்,
திறங்கள் உங்களுக்குத் திறக்கப்ப்படும்!

நாம் அன்றாட வாழ்வின் சந்திக்கக் கூடிய பெரும்பாலான பிரச்சனை ஒரு மனிதனால், இன்னொரு மனிதனுக்கே உண்டாக்கப்படுகிறது.
மனிதனால் உண்டாக்கக் கூடிய பிரச்சனைகளுக்கு மனிதனே தீர்வைத் தேட வேண்டுமே தவிர மாற்று சக்தி அல்ல....

எனவே முடிந்த அளவிற்கு, மனிதம் காப்போம்.......

அது நமது பிரச்சனைகளைத் தடுத்து விடாது என்ற போதிலும், நல்ல மனித மனங்களை நம்மிடம் இழுத்து வந்து நமது பிரச்சனைக்கான தீர்வுகளயும் பெற்றுத் தர உதவும்.....


அன்பைக் கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்,
மனக்கதவுகளை திறங்கள் உங்களுக்காய் பல கதவுகள் திறக்கப்ப்படும்!